மரின் பரேட் குடியிருப்பில் வசிக்கும் சிறுவர்கள், குடும்பத்தில் ஏற்படும் நிதி நெருக்கடிச் சூழலால் பாலர் பள்ளிக் கல்வியை மேற்கொள்ள முடியாமல் போவதை முறியடிக்க, அவர்களின் குடும்பங்களுக்குக் கைகொடுக்கும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று மரின் பரேட் தொகுதிக்கு உட்பட்ட ஜூ சியாட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திரு எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.
கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் சட்ட இரண்டாம் அமைச்சருமான இவர், ஏப்ரல் 26ஆம் தேதி பிற்பகல், 15 லோரோங் கே தெலுக் குராவில் அமைந்துள்ள புதிய பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர் பள்ளியின் திறப்புவிழாவில் கலந்துகொண்டு அவ்வாறு கூறினார்.
“குறைந்த வருமான குடும்பங்கள் கைவிடப்படக் கூடாது. கல்வி அனைவருக்கும் அணுகத்தக்கதாக இருக்க வேண்டும். வாய்ப்புகள் இல்லாதவர்களுக்கு முடிந்தவரை கல்வி மூலம் உதவி வழங்கப்படும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜூ சியாட் வளாகம் 2010களில் சிங்கப்பூரின் முதல் அனைத்து தனியார் சொத்துத் தொகுதியானது. இதனால் அந்த வளாகத்தில் இருக்கும் பாலர் பள்ளிகள் பெருமளவில் தனியாரால் நடத்தப்படுகின்றன.
ஜூ சியாட் பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர் பள்ளியில் நிதியுதவி கிட்டாமல் இருக்கும், சிங்கப்பூர் குடும்பங்களுக்கு பாலர் பள்ளியின் மாதக் கட்டணம் $163.50, குழந்தைப் பராமரிப்புக்கு மாதக் கட்டணம் $741.20.
“புதிய உதவித்தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதால் குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட ஜூ சியாட் பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர் பள்ளியில் சேர முடியும்,” என்று திரு எட்வின் டோங் நம்பிக்கை அளித்தார்.
ஜூ சியாட் பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர் பள்ளி வளாகம் காலம் கடந்ததாலும் பாடக்கலைத்திட்டம் புதுப்பிக்கப்படாமல் இருந்ததாலும் அதை மறுமேம்பாடு செய்வதற்கான திட்டம் 2018ல் தொடங்கியது.
50 ஆண்டுகளுக்கும் மேலான அந்தப் பழையக் கட்டடத்தை மறுசீரமைக்க $2 மில்லியனுக்கும் மேற்பட்டத் தொகை திரட்டப்பட்டது. நிலத்தின் குத்தகைக் காலம் குறித்து சிங்கப்பூர் நில ஆணையத்தோடு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளியின் விளையாட்டுப் பகுதியை விரிவாக்கம் செய்ய அருகில் இருக்கும் நிலம் சேர்க்கப்பட்டுள்ளது.
முந்தைய 1,347 சதுர மீட்டருடன் ஒப்பிடுகையில் புதிய வளாகம் 1,928 சதுர மீட்டர் நிலத்தில் அமைந்துள்ளது. அதன் வெளிப்புற பரப்பளவு 820 சதுர மீட்டருக்கு இரு மடங்காக அதிகரித்துள்ளது.
விளையாட்டுப் பகுதி விரிவாக்கம் செய்யப்பட்டதால் பிள்ளைகளை ஈர்க்கும் விதமாக பலவிதமான திட்டங்கள் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இயற்கைத் தடம், செல்லப்பிராணிகள் பராமரிப்பு, தடை பாதை போன்ற நடவடிக்கைகளில் பிள்ளைகள் ஈடுபட முடியும்.
புதிய நடவடிக்கைகள் மரின் பரேட்டில் உள்ள இதர பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்த திரு எட்வின் டோங் விரும்புகிறார். முஸிம் மாஸ் பனை எண்ணெய் நிறுவனம் $300,000 நிதி வழங்கியுள்ளது.
“இந்த வெளிப்புற வசதிகளை வைத்து பிள்ளைகளின் கற்றல் இளம்வயதிலேயே எளிதில் மேம்படும். வளர்ச்சி, கற்பனைத் திறன் ஆகியவை மேம்பட இது ஏதுவாக இருக்கும். சில பெற்றோர்கள், பிள்ளைகள் நான்கு வயதில் இருக்கும்போதுதான் பாலர் பள்ளியில் சேர்க்கிறார்கள். பிள்ளைகள் 18 மாதங்களாக இருக்கும்போதே பள்ளியில் சேர்த்தால் அவர்களின் கற்றல் சிறப்பாக இருக்கும்,” என்று பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் ஹசீனா பேகம் பாஷா, 56, கூறினார்.
Read full article here.
Comments